Monday, December 26, 2011

இணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள்-மாமதயானைஅலைபேசி எண் :9994823183,

மின்னஞ்சல் முகவரி:manisen37@yahoo.com.

    இணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள்

 

         மனிதநேயம் என்பது அடிப்படையில் தனிமனிதனின் நடத்தை மற்றும் மனம் குறித்த  தத்துவப் பார்வை ஆகும். மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த செயல்களுக்கு காரணமாக இருக்கும் குணங்களை கண்டறிந்து சொல்லுவது ஆகும்.

        மனிதநேயம் என்பது இயற்கை அறிவியல் சார்ந்த முறை ஆகும். மனிதநேயமானது  பண்டைய மற்றும் நவீன மொழிகளின் இலக்கியம், வரலாறு, தத்துவம், மதம், இசை, நாடகம் மற்றும் நிகழ்த்து கலை  ஆகியவற்றைத் தன்னகதே உள்ளடக்கியதாக திகழ்கின்றது. மேலும் தொழில்நுட்பம், வரலாறு, மானுடவியல்,  தொடர்பியல், கலாச்சாரம், சட்டம் மற்றும் மொழியியல் ஆகியத் துறைகளையும் உள்ளடக்குகின்றன.


         “மனிதநேயம்; மனிதனது பெருமையையும் உரிமையையும் மதிக்கும் வகையில் அமைந்ததொரு கோட்பாடு. மனிதனின் ஆளுமைப் பண்புகளை மதிக்கவும், அவனது நலன்களைப் பேணிவரவும், சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மனிதன் முழுமையான வளர்ச்சியைப் பெறவும் துணைபுரிவது இக்கோட்பாடு. சமயம் மற்றும் இனவெறிக் கொடுமை, சமயக் காழ்ப்பு, மாற்றுக்கோட்பாட்டைவெறுத்தல் ஆகிய அனைத்து இயல்புகளையும் களைவது இக்கோட்பாட்டின் நோக்கமாகும். பொருள் முதலியவைச் சார்ந்த இக்கோட்பாடு மனித இனத்தின் விடுதலைக்காக உரத்து முழங்குவதுடன் சமயங்களையும் அதன் சடங்குகளையும் முற்றாக எதிர்ப்பது1

பகுப்பாய்வு, விமர்சனம், ஊகம் ஆகிய ஆய்வுமுறைகளை பயன்படுத்தி  மனித நிலையை ஆய்விற்கு உட்படுத்துவதாகும்.

மனிதநேயக் கோட்பாட்டின் குறிக்கோள்கள்:

மனிதநேயக் கோட்பாட்டின் குறிக்கோள் மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பதாகும். மனித நேயக் கோட்பாட்டின் குறிக்கோளினை எஸ்.போபொவ் பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
           மனிதகுல பெருமை மற்றும் உயர்வினை காப்பது, மனிதனைக் காட்டிலும் எதுவும் பெரியது இல்லை என்ற உறுதி செய்தல்,மனித உழைப்பிற்கு மதிப்பு அளித்தல்.மனிதனுடைய ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை வைத்தல்,சுதந்திரமான வளர்ச்சியில் மனிதனுடைய உரிமைக்கு ஏற்ப வழங்கல் போன்றவையாகும்.
  
      இணையத்தில் தமிழ் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு நா.கோவிந்தசாமியின் முயற்சியினால் சிங்கைப்பல்கலைகழக வலைதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டது. தமிழ் இணையத் தளங்களில் மனிதநேய கவிதைகள் மிகுந்து படைக்கப்பட்டிருக்கும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள் எனும்  தலைப்பில் இவ்ஆய்வுக்கட்டுரை ஆராய்கிறது.

இணையத்தள கவிதைகளில் மனிதநேயம்:
 “மனிதரின் தன்மையை இருத்தியலை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது.தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்”.2

      தமிழ்மொழிக்கவிதைகள் எனும் வலைப்பதிவில் பிரசாத் எனும் படைப்பாளரால் படைக்கப்பட்டுள்ள ’மனிதநேயம் மலர’ என்கின்ற இக்கவிதையில்,

 “மனிதநேயம் மலர, மானுடம் தழைக்க
உனது கதவுகளை திறந்து வை!
ஆம் காற்று உள்ளே பிரவேசிக்க அல்ல....
நமது உதவிக் கரங்கள் மற்றவர்களுக்காக
வெளியே செல்ல.....! 3


       மனிதர்களை மதிக்க நமக்கு போதிய காலமும் நேரமும் இல்லை. ஆகவே, நாம் மனிதரை நேசிப்பதும் உதவிசெய்வதும் இல்லை. மனிதர்களின் நிறைகுறைகளை  புரிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் புரிய வேண்டும்.நம் கண்முன்னால் அவதிபடும் மனிதர்களுக்கு அக்கறையுடன் அவர்களுடைய இன்னல்கள் தீர உதவ வேண்டும்.தன்னலம் இல்லாத உதவி மனிதத்தன்மையுடன் மனிதன் வாழ வழிவகுக்கும் தலையாய இன்றியமையாத மனித பண்பாகும்.
அண்டை நாடுகளும்,மாநிலங்களும் மண்ணுரிமை கொண்டு எல்லைகளை வகுத்து போராடும் இக்காலத்தில் மனிதநேயப்பண்பு மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகிறது .எனும் கருத்தை,
போர்களை நிறுத்து
புன்னகையை உடுத்து
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது4
 வைரமுத்துவின் இக்கவிதை  எடுத்துரைக்கின்றது.
நிலவு நண்பன் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள கசிவ் ஞானியாரின் கவிதையில்,

 “இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ....
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை ...
தர்மசங்கடப்படுத்துகிறது

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!5

மனிதனின் மனதில் இரக்கச் சிந்தனையும்,உதவும் மானப்பான்மையும் இருந்தால் மட்டும் போதாது.அத்தன்மைகளை சரியான நேரத்தில் மற்றவர்களுக்காக வெளிப்படுத்தவேண்டும்.பிறருடைய துன்பங்களைத் தன்னுடைய துன்பமாக எண்ணி உடன் போக்க உதவவேண்டும்.  இக்கவிதையில் இரக்க மனம், உதவி செய்யும் எண்ணம் இருந்தும் அதை வெளிப்படுத்தாத மனிதனைப்பற்றி விவரிக்கின்றது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும் என்கிறார் திருவள்ளுவர்.மனிதநேயத்தின் தலையான பண்பு பிற உயிர்களுக்கு அன்பு காட்டுவதாகும்.என்பதை,
 “பாதைக்காட்ட தொழுநோயாளியின்
கரம்பற்றிய கணத்தில்
கடவுளானான்6.
   அன்பு காட்டுபவன் கடவுளுக்கு நிகரானவனாகிறான் எனும் கருத்தின் வாயிலாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

     ‘இலங்காஸ்ரீ’   எனும்   இணையத்தளத்தில்    வின்சி    என்னும் படைப்பாளரால் படைக்கப்பட்டிள்ள கவிதையில்,

 “இறந்தவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள்,
என்பதற்கு மேல்
தமிழர் என்பதை ஏன் மறந்தீர்...?

மனிதநேயம் மதங்களுக்கு
அப்பாற்பட்டது,
எந்த மதமும் சொல்லவில்லை
மனிதநேயத்தை மறக்கும்படி,

இனியாவது மனிதநேயம்
காத்து நிற்போம்
இல்லையானால்
மனிதன் என்ற பெயரை
மாற்றி வைப்போம்7

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுதல், துயர்கண்டு வருந்துதல், துயர் தீர்க்க முற்படுதல் ,பிறரை இடையூறு செய்யாதிருத்தல், பிறருக்காக வாழ்தல் ஆகியவை மனிதநேய பண்புகளாகும்.ஆனால், மனிதன் மதம், சாதி, இனம் ஆகியவற்றால் பிளவுபட்டுக்  கிடக்கின்றான்.மனிதநேயமற்று ஒருவரை ஒருவர் துன்புறுத்தி வாழ்வதில் இன்பம் காண்பவனாக மனிதன் வாழ்கின்றான். மனித சமுதாயத்தின் இப்போக்கினை மாற்றி மனிதர்களின் மனதில் மனிதநேயத்தின் மகத்துவத்தினை உணர்த்த செய்யவேண்டும்  என்பதை உணர்த்துகின்றது.
முத்துக்கமலம் இணையத்தளத்தில்  வெளிவந்துள்ள விஷ்ணு குமாரின் கவிதையில்,
நாய்க்கொரு குணம்
பூனைக்கொரு குணம் - அவற்றிடம்
அன்பு காட்டும் நீ
மனிதனிடம் மறுப்பதேன்
மரம் போல் நினைப்பதேன்
பரஸ்பர அன்புகாட்டி
மனிதனை மனிதன் நேசி - அதுவே
மகத்தான பேருதவி
இதுவே! மனிதநேயம்
வளர்க்கும் உரம்!
ஐந்தறிவு விலங்குகளுக்கெல்லாம் அன்புகாட்டி அரவணைக்கும் மனிதன் தன் சகஅறிவுள்ள மனிதனை ஒதுக்கும் நிலை
இச்சமுதாயத்தில் மேலோங்கியுள்ளது.சகமனிதனையும் தமக்கு சமமாக கருதி அன்புகாட்டுதல் வேண்டும்.பிற மனிதர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து இச்சமுகத்தில் மனிதம் சாகதபடி பாதுகாக்கவேண்டுமென இக்கவிதை வலியுறுத்துகின்றது

              மனிதநேயத் தன்மையானது இச்சமுகத்தில் நாகரீக வளர்ச்சியினால் மிகவும் குறைந்த அளவிலேயே மக்களிடம் கடைப்பிடிக்கப்படுகின்றது.மனிதன் கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிலைப்படுத்தி கொள்ள வேண்டியிருப்பதால் மனிதநேயத்தை பற்றிய சிந்தனைகளையும்,உணர்வுகளையும் தன் அகத்தில் கொண்டிருப்பதிலை.இந்தநிலைமாறி மனிதன் தன் சக மனிதர்களை தனக்கு சமமாக என்னும் நிலை உருவாக வேண்டும்.மதம்,சாதி,இனம் ஆகியவை  களைந்தெரியப்பட வேண்டும். சமத்துவமும், உதவிசெய்யும் மானப்பான்மையும், அன்புணர்வும் மனிதர்களின் மனதில் நிலைத்து நின்று மனிதநேயத்துடன் மனிதன் தன்னையும் தன்னை சார்ந்த சமூகத்தினையும் மாற்றி கட்டமைக்கவேண்டும்.
அடிக்குறிப்புகள்:
1.      thoguppukal.wordpress.com/2011/01/30/

No comments: